கொடுத்த கடன் வராத விரக்தியில்... ஒரே குடும்பத்தில் 7 பேரின் உயிர் பறிபோன சோகம்


கொடுத்த கடன் வராத விரக்தியில்... ஒரே குடும்பத்தில் 7 பேரின் உயிர் பறிபோன சோகம்
x
தினத்தந்தி 28 Oct 2023 3:01 PM GMT (Updated: 28 Oct 2023 4:44 PM GMT)

குஜராத்தில் கடன் திரும்பி வராத விரக்தியில், பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து நபர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சூரத்,

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வந்தவர் மணீஷ் சொலாங்கி (வயது 37). இவர் அதஜன் பகுதியில் பலன்பூர் பாடியா என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், பிளாட்டில் 7 பேர் உயிரிழந்து கிடக்கின்றனர் என போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனையடுத்து, உடனடியாக சம்பவ பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில், சொலாங்கி அவருடைய தந்தை, தாய், மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி விவரம் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் மணீஷ் சொலாங்கி, அவருடைய மனைவி ரேஷ்மா பென் சொலாங்கி, சொலாங்கியின் தாயார் ரீட்டா சொலாங்கி, தந்தை கனு பாய் சொலாங்கி, 6 வயது மகன் மற்றும் 6, 10 வயதுடைய இரு மகள்கள் என 7 பேரும் உயிரிழந்தனர். அந்த பகுதியில் இருந்து, தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.

அதில், சிலருக்கு சொலாங்கி கடன் கொடுத்ததும், ஆனால் கொடுத்த கடன் திருப்பி வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் விரக்தி அடைந்து, அதனால் அவர்கள் அனைவரும் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. சொலாங்கியின் குடும்பத்தினர், குடியிருந்து வரும் பிளாட்டை விற்கும் முடிவில் இருந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. எனினும், அந்த குறிப்பில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

கடன் திரும்பி வராத விரக்தியில், பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story