எச்.டி.கோட்டையில் தொடர் அட்டகாசம் சிறுத்தை கூண்டில் சிக்கியது


எச்.டி.கோட்டையில் தொடர் அட்டகாசம் சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

எச்.டி.கோட்டையில் பசுமாட்டை கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

மைசூரு:

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா சென்னேகவுடனஹூண்டி மற்றும் தேவலாபுரம் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. குறிப்பாக வீடுகளில் உள்ள கால்நடைகளை அடித்து கொன்றுவிட்டு செல்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சிறுத்தை ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து பசு மாடு ஒன்றை அடித்து தின்று விட்டு சென்றது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் சிறுத்தையை பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர். அதன்படி வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

கூண்டில் சிக்கியது

சென்னேகவுடனஹூண்டி மற்றும் தேவலாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவலாபுரா கிராமத்தில் வைத்திருந்த கூண்டில் 10 வயது ஆண் சிறுத்தை ஒன்று மாட்டி கொண்டது. நேற்று காலை இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் கூண்டுடன் சிறுத்தையை மீட்டு வாகனத்தில் ஏற்றி சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை பந்திப்பூர் வனப்பகுதியில் விட்டனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.


Next Story