கனடா வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு


கனடா வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு
x

கனடா வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கனடா நாட்டின் வெளியுறவு மந்திரி மெலனி ஜோலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை விரிவுப்படுத்த முயற்சித்து வரும் சூழலில் அதை எதிர்கொள்வது குறித்தும், பிராந்தியத்தில் இருநாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் ஆழமாக ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "கனடா வெளியுறவு மந்திரி மெலனி ஜோலியுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் மக்கள் உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேசினோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கனடாவின் புதிய யுக்தி நமது உறவுக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொண்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கனடா மந்திரி மெலனி ஜோலி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "கனடாவின் புதிய இந்தோ-பசிபிக் வியூகம் குறித்தும், அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிக்கும்போது, நமது மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், எங்கள் பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்தவும் எவ்வாறு இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம் என்பது குறித்தும் விவாதித்தோம்" என தெரிவித்துள்ளார்.


Next Story