மூடிகெரே தாலுகாவில் காபி தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


மூடிகெரே தாலுகாவில்  காபி தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:45 PM GMT)

மூடிகெரே தாலுகாவில் காபி தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு;


காட்டு யானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஜேனுபைலு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாக நடத்து வருகிறது.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக காபி தோட்டம் உள்ளது. அந்த காபி தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அந்த காட்டுயானை அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த காபி, வாழை போன்ற பயிர்களை தும்பிக்கையால் முறித்தும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியது.

இதனை அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அந்த வீடியோவை அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். காட்டு யானை நடமாட்டத்தால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

மற்றொரு இடத்திலும்...

இதேபோல் மூடிகெரே தாலுகா பங்கனேஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் சுந்தரேஸ் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்திலும் இரை தேடி காட்டுயானை ஒன்று நுழைத்துள்ளது. இது அங்கு பயிரிட்டு இருந்த காபி, மிளகு, வாழை, ஏலக்காய் போன்ற பயிர்களை சேதப்படுத்தி சென்றது.

இதுகுறித்து விவசாயி பிரகாஷ், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காட்டு யானை அட்டகாசத்தால் பிரகாசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காட்டு யானைகள் நடமாட்டத்தால் பீதியடைந்துள்ள 2 கிராமங்களை சேர்ந்த மக்களும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story