மைசூருவில், வெவ்வேறு இடங்களில் விவசாயிகளை மிரட்டி ஆட்டோ டிரைவர்கள் வழிப்பறி
மைசூருவில், வெவ்வேறு இடங்களில் விவசாயிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மைசூரு;
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கோளூரு கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு (வயது 31). விவசாயி. இவா் மைசூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பாா்த்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மைசூரு பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மா்மநபர் ஒருவர் மஞ்சுவை வழிமறித்துள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார்.
இதேபோல் கேரள மாநிலத்தை சோ்ந்தவர் அருண் (29). விவசாயியான இவர் கடந்த 7-ந்தேதி மைசூரு வந்திருந்தார். அப்போது அவர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் அருண் கூறிய இடத்திற்கு செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்து சென்று அவரை மிரட்டி நகை, செல்போன், பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் லஸ்கர் மொகல்லா, நஜர்பாத் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.