உப்பள்ளியில் கஞ்சா விற்றதை போலீசில் கூறிய வாலிபருக்கு கத்திக்குத்து


உப்பள்ளியில் கஞ்சா விற்றதை போலீசில் கூறிய வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:45 PM GMT)

உப்பள்ளியில் கஞ்சா விற்பனை செய்ததை போலீசில் கூறிய வாலிரை கத்தியால் குத்திய நபரை தேடிவருகின்றனர்.

உப்பள்ளி

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பெண்டிகேரி பகுதியில் கடந்த சிலநாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தார்வார் மாவட்டத்தில் மர்மகும்பல் விற்பனை செய்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், பெண்டிகேரி பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது. இதுகுறித்து அதேப்பகுதியை சேர்ந்த உலகப்பா (வயது26) என்பவர் பெண்டிகேரி போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் அதற்குள் கஞ்சா விற்பனை கும்பல் அங்கிருந்து சென்றது.

இந்தநிலையில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து உலகப்பா போலீசிற்கு தகவல் கொடுத்தது அவர்களுக்கு தெரியவந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெண்டிகேரி பகுதியில் உலகப்பா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த உலகப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெண்டிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story