அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
வடமாநில தொழிலாளர் தொடர்பாக போலி வீடியோ பதிவிட்ட வழக்கில் ‘யூடியூபர்’ மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, அமைதி பூங்காவாக தமிழ்நாடு திகழ்வதாக கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்டதாக பிரபல யூடியூபர் பீகாரை சேர்ந்த மணீஷ் காஷ்யப் என்பவரை போலீசார் கைது செய்தனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
மிரட்டி பணம் பறித்தல்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் காஷ்யப் சார்பில் மூத்த வக்கீல் மணீந்தர் சிங் ஆஜராகி, 'நாளேடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே மனுதாரர் வீடியோவை வெளியிட்டார்' என வாதிட்டார்.
அப்போது பீகார் மாநில அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரர் தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி வழக்குகளும் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு உள்ளன' என வாதிட்டார்.
அரசியல்வாதி
தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரியுடன் மூத்த வக்கீல் கபில் சிபில் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் 'மனுதாரர் ஊடகவியலாளர் அல்ல, அரசியல்வாதி. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள வழக்குகளை பீகாரில் பதிவு செய்துள்ள வழக்குகளுடன் இணைக்க கோரி மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை நாட முடியும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை அதன் ஆலோசனைக் குழுவும் உறுதி செய்துள்ளது. எனவே, ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
தமிழ்நாடு அமைதிபூங்கா
மணீஷ் காஷ்யப் சார்பில் மூத்த வக்கீல் மணீந்தர் சிங் வாதங்களை தொடர்ந்து முன்வைக்க முற்பட்டபோது, நீதிபதிகள் 'அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், எதை வேண்டுமானாலும் பரப்பி அமைதியற்ற சூழலை உருவாக்குவதா? இவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது' என்று தெரிவித்தனர்.
மேலும் 'யூடியூபர்' மணிஷ் காஷ்யப்பின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இருப்பினும் வழக்குகளை இணைக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் மனுதாரர் ஐகோர்ட்டை நாடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.