14-வது சட்டசபை தேர்தலில்தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ்


14-வது சட்டசபை தேர்தலில்தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

14-வது சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

பெங்களூரு-

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களை பிடித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பா.ஜனதா கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மேலும் தங்களுக்கு ஆதரவு வழங்கினால் மந்திரி பதவி வழங்குவோம் என்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா உறுதி அளித்திருந்தது. அதன்படி ஆட்சி அமைத்தவுடன் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் மந்திரி பதவி வழங்கி பா.ஜனதா அழகு பார்த்தது. எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார். பதவியில் இருந்தபோது அவர் ஊழல் வழக்கில் சிக்கினார்.

இதனால் அவருடைய முதல்-மந்திரி பதவி பறிபோனது. இதையடுத்து கட்சியின் மேலிட உத்தரவுப்படி சதானந்தகவுடா முதல்-மந்திரி ஆனார். அவருக்கு பின்னர் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். 2008-2013 ஆண்டு காலக்கட்டத்தில் பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய 3 பேர் முதல்-மந்திரிகளாக இருந்தது குறிப்பிடத்தது.

இதையடுத்து 2013-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. பா.ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா கர்நாடக ஜனதா என்ற கட்சியை தொடங்கினார். இதன்காரணமாக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிறுத்தப்பட்டார். காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளரை முன்னிறுத்தாமல் களமிறங்கியது. கர்நாடக ஜனதா கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக எடியூரப்பா நின்றார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் குமாரசாமி முதல்-மந்திரி வேட்பாளராக நின்றார். இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. வாக்காளர்களின் வசதிக்காக 50,446 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த தேர்தலில் 2 கோடியே 23 லட்சத்து 15 ஆயிரத்து 727 ஆண்களும், 2 கோடியே 13 லட்சத்து 67 ஆயிரத்து 912 பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2,100 பேரும் என மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 739 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இருப்பினும் தேர்தலில் மொத்தம் 3 கோடியே 12 லட்சத்து 13 ஆயிரத்து 124 பேர் வாக்களித்திருந்தனர். இது 71.45 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

இந்த தேர்தலில் மொத்தம் 2,772 ஆண்களும், 175 பெண்களும், திருநங்கை ஒருவரும் போட்டியிட்டனர். இதில் 218 ஆண்களும், 6 பெண்களும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் தனிக்கட்சி தொடங்கிய எடியூரப்பா, பா.ஜனதா ஓட்டுகளை பிரித்தார். அத்துடன் பா.ஜனதாவில் இருந்து விலகிய ஸ்ரீராமுலுவும் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார். இதனால் பா.ஜனதாவுக்கு வடகர்நாடக பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இதன்காரணமாக இந்த தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. 223 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 122 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் முதல்-மந்திரி வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட பரமேஸ்வர் தேர்தலில் தோல்வியை தழுவினார். இதனால் சித்தராமையா முதல்-மந்திரி ஆனார்.


Next Story