டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு; மிக மோசம் பிரிவில் இடம் பெற்ற காற்று தரக்குறியீடு


டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு; மிக மோசம் பிரிவில் இடம் பெற்ற காற்று தரக்குறியீடு
x

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீடு மிக மோசம் என்ற பிரிவில் இடம் பெற்று உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த வாரத்தில் இருந்து காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரம் சீராக மோசமடைந்து வருகிறது.

கடந்த புதன்கிழமை இந்த குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த வெள்ளி கிழமை இந்த குறியீடு மித அளவில் இருந்தது. தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரம் நேற்று முன்தினம் 173 ஆக பதிவாகி இருந்தது. நேற்றும் காற்றின் தரம் மோசமடைந்தது. இதன்படி, ஒட்டுமொத்த காற்று தர குறியீடு நேற்று 266 ஆக பதிவானது.

எனினும், நொய்டா பகுதியில் இன்னும் மோசமடைந்து 290 (மோசம்) என்ற அளவில் இருந்தது. இவை தவிர, ஆனந்த விஹார் பகுதியில் மிக மோசம் (345) என்ற அளவிலும், ஐ.டி.ஓ. பகுதியில் 309, நியூ மோதி பாக் பகுதியில் 360, துவாரகா செக்டார்-8 பகுதியில் 313 என்றும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், காற்று தர குறியீடு இன்றும் தொடர்ந்து மோசமடைந்து உள்ளது என சபர் என்ற அதுபற்றிய ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

டெல்லியில் காற்றின் தரம் இன்றும் குறைந்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீடு 306 (மிக மோசம்) ஆக உள்ளது. இதுபற்றி இந்தியா கேட் பகுதியில் சைக்கிளிங் செல்லும் சஞ்சய் சவுத்ரி என்பவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கடந்த 10 முதல் 12 நாட்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது என நினைக்கிறேன்.

அதனை எங்களுடைய கண்களால் நாங்கள் இன்று உணர முடிந்தது. பனியும் அடர்ந்து காணப்படுகிறது. நிலைமை நன்றாக இல்லை என்றே நினைக்கிறேன். சைக்கிளிங் செல்லும்போது நாங்கள் முக கவசங்களை உடன் கொண்டு செல்கிறோம். வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.


Next Story