சுதந்திர தினத்தையொட்டி கோலாகல விழா: சித்தராமையா, தேசிய கொடி ஏற்றுகிறார்


சுதந்திர தினத்தையொட்டி கோலாகல விழா: சித்தராமையா, தேசிய கொடி ஏற்றுகிறார்
x

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூருவில் நடைபெறும் கோலாகல விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்று முதல்-மந்திரி தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம்.

சித்தராமையா கொடி ஏற்றுகிறார்

அதுபோல் இந்த ஆண்டு புதிதாக பதவி ஏற்று காங்கிரஸ் அரசில் முதல்-மந்திரியாகஇருக்கும் சித்தராமையா தேசிய கொடியை ஏற்ற உள்ளார். முதல்-மந்திரியாக அவர் 6-வது முறையாக தேசிய கொடியை ஏற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூருவில் உள்ள மானேக்ஷா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் மானேக்ஷா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுவதால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அது

தவிர பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாலும், பெங்களூருவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாலும் நகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதுபற்றி பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூரு மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் 15-ந் தேதி(நாளை) நடைபெறுகிறது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிடுகிறார். பின்னர் மேடைக்கு வந்து குண்டு துளைக்காத கூண்டில் இருந்தபடி சித்தராமையா சுதந்திர தின உரையாற்றுகிறார்.

அதன் பிறகு போலீசார் உள்பட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து சுதந்திர தின உணர்வை தூண்டும் வகையிலான பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது 9 போலீஸ் துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 43 இன்ஸ்பெக்டர்கள், 110 சப்-இன்ஸ்பெக்டர்கள், 72 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 554 ஏட்டுகள், 77 பெண் போலீசார், 157 அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள்

போக்குவரத்தை சீர் செய்ய 3 துணை போலீஸ் கமிஷனர்கள், 6 உதவி போலீஸ் கமிஷனர்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 31 சப்-இன்ஸ்பெக்டர்கள், 125 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 107 தலைமை காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இது மட்டுமின்றி விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை உறுதி செய்ய 10 கம்பெனி ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள், அதிவிரைவுப்படையினரும் அங்கு நிறுத்தப்பட உள்ளனர். கருடா படையினரும் அங்கு தயார் நிலையில் இருப்பார்கள். மைதானத்தை சுற்றிலும் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த விழாவுக்கு வருகிறவர் களுக்கு நுழைவு பாஸ்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

முக்கிய பிரமுகர்கள்

2-ம் எண் நுழைவு வாயிலில் முக்கிய பிரமுகர்களும், 3-வது நுழைவு வாயிலில் மிக முக்கிய பிரமுகர்களும் அனுமதிக்கப்படுவார்கள். 4-வது நுழைவு வாயிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். விழாவுக்கு வரும் ஒவ்வொருவரும் ஸ்கேனர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொதுமக்கள் காலை 8.30 மணிக்குள் மைதானத்திற்கு வந்து தங்களின் இருக்கையில் அமர வேண்டும். விழாவுக்கு வரும் பொதுமக்கள் மணிப்பால் சென்டர் பக்கம் இருந்து வந்து 4-வது நுழைவு வாயிலில் உள்ளே வர வேண்டும். அதிகாரிகள், பொதுமக்கள் அமர 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

போலீஸ் கமிஷனர் பேட்டி

இதற்கிடையே சுதந்திர தினத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க நகர் முழுவதும் முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா வருகையையொட்டி மானேக்ஷா மைதானத்தை சுற்றி 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றமும், முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் தீப்பெட்டி உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதியில்லை.

24 மணிநேரமும் கண்காணிப்பு

முன் எச்சரிக்கையாக பெங்களூருவில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், பிற பொது இடங்களை போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். ரெயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பெங்களூருவில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடி ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொருட்கள் கொண்டுவர தடை

விழாவுக்கு வரும் பொதுமக்கள் சிகரெட், தீப்பெட்டி, துண்டு பிரசுரங்கள், வண்ண பொடிகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில், ஆயுதங்கள், கத்திகள், கருப்பு பொருட்கள், சிற்றுண்டி, மதுபான பட்டில்கள், போதைப்பொருட்கள், பட்டாசு மற்றும் வெடி பொருட்களை மைதானத்திற்குள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story