இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு


இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு
x

சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாற 5 உறுதிகளை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து, 76-வது ஆண்டு பிறந்துள்ளது. சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தொடர்ந்து 9-வது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, 21 குண்டுகள் முழங்க, இசை வாத்தியங்களுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த நாள் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. புதிய உறுதிப்பாட்டுடன், புதிய இலக்கை நோக்கி நடைபோட வேண்டிய நாள்.

இந்தியா, பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதில் இருந்துதான் நமக்கு வலிமை கிடைக்கிறது. தேசபக்தி என்ற பொதுவான நூலிழையால், இந்தியா அசைக்க முடியாத நாடாக இருக்கிறது.

இன்னும் 25 ஆண்டுகளில், நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளோம். அந்த நேரத்தில், நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றவும் 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்.

1. வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்குவோம்.

2. அடிமை மனப்பான்மையை அகற்றுவோம்.

3. நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம்.

4. ஒற்றுமை உணர்வுடன் இருப்போம்.

5. குடிமக்கள் தங்களது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் முதல்-மந்திரிகளும் இந்த உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் சேர்க்க அடுத்த 25 ஆண்டுகள் இளைஞர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும்.

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, தற்சார்பு நாடாக இந்தியாவை உயர்த்த வேண்டும்.

நாடு உறுதி எடுத்துக்கொண்டு ஒன்றாக செயல்படும்போது தனது இலக்குகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை நமது அனுபவம் உணர்த்துகிறது.

கொரோனாவுக்கு எதிராக போராடியது, கிராமங்களுக்கு மின்சார வசதி அளித்தது, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியது போன்றவற்றை அதற்கு உதாரணமாக கூறலாம். நாட்டில் பலருக்கு வசிப்பதற்கு போதிய இடம் இ்ல்லாதபோது, சிலருக்கு தாங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பதுக்க போதிய இடம் இல்லாததை பார்க்கிறோம்.

ஊழல், வாரிசு அரசியல்

ஊழல் என்பது நாட்டை கரையான் போல் அரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக நாம் முழு பலத்துடன் போராட வேண்டும். நாட்டை கொள்ளையடித்தவர்கள், அந்த பணத்தை திருப்பித்தர நாம் முயற்சிக்க வேண்டும்.

ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு புகழாரம் சூட்டுவதும் நடக்கிறது. ஊழலை நாம் வெறுக்காதவரை இந்த மனப்பான்மை முடிவுக்கு வராது.

ஊழலும், வாரிசு அரசியலும் நாட்டின் மிகப்பெரிய சவால்கள். வாரிசு அரசியலும், உறவினர்களுக்கு சலுகை அளிப்பதும் அரசியலை மட்டுமின்றி மற்ற துறைகளையும் கெடுத்துவிட்டன. இவற்றுக்கு முடிவுகட்ட வேண்டும்.

உறவினர்களுக்கு சலுகை அளிப்பது, திறமைக்கு பாதகமாக அமைகிறது. இந்திய அமைப்புகளில் இருந்து ஊழலை விடுவிக்க விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டும். அதுதான் ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஏற்ற வழி.

எனது கடமை

ஊழல், உறவினர்களுக்கு சலுகை அளிப்பது ஆகிய தீமைகளை ஒழிப்பதை எனது அரசியல்சட்ட மற்றும் ஜனநாயக கடமையாக கருதுகிறேன். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

வாரிசு அரசியல், நாட்டின் வலிமைக்கு அநீதி இழைக்கிறது. வாரிசு அரசியலுக்கு ஒரு குடும்பத்தின் மீதுதான் அக்கறை இருக்கும். நாட்டு நலன் மீது அக்கறை இருக்காது. நாட்டை முன்னேற்ற இந்த தீமைகளை ஒழித்து, இந்திய அரசியலை புனிதப்படுத்தும் பணியில் என்னுடன் கைகோர்க்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இல்லாவிட்டால், தங்களை முன்னேற்றி விட உறவினர்கள் இல்லாததால்தான் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்று நினைத்து, பலரும் விரக்தி அடைந்து விடுவார்கள். அந்த மனப்பான்மை, நாட்டுக்கு நல்லதல்ல.

விளையாட்டு வீரர்கள் தேர்வு

சமீப காலங்களில், திறமை அடிப்படையில், வெளிப்படையாக விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்பெல்லாம், உறவினர்கள் சிபாரிசு மூலம்தான் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் மைதானத்துக்கு சென்ற போதிலும், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் செயல்பட்டனர்.

பெண்களுக்கு மரியாதை அளிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான தூண். பேச்சிலும், செயலிலும் பெண்களின் கண்ணியத்தை குறைக்கக்கூடாது.

பெண் சக்தி

பெண்சக்தி மூலம் நமது இலக்கை குறைந்த காலத்திலேயே நிறைவேற்ற முடியும். பெண்களுக்கு நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வாய்ப்புகளை அளிக்கிறோமோ, அவ்வளவு பலன்களை அறுவடை செய்ய முடியும்.

ஜான்சிராணி லட்சுமிபாய், ஜால்கரி பாய், ராணி சென்னம்மா, பேகம் ஹஸ்ரத் மகால் போன்ற இந்திய பெண்களின் வலிமை நமக்கு பெருமை அளிக்கிறது. இந்திய பெண்கள், தியாகம் மற்றும் போராட்டத்துக்கு அடையாளமாக உள்ளனர்.

130 கோடி மக்கள் ஒரு அடி முன்னெடுத்து வைக்கும்போது, நாடு 130 கோடி அடி முன்னெடுத்து வைக்கிறது. இந்தியா தனது முயற்சிகளை மதிப்பிட சொந்த அளவுகோல் வைத்திருக்க வேண்டும். உலக நாடுகளின் சான்றிதழை சார்ந்து இருக்கக்கூடாது. சொந்த பலத்துடன், சொந்த காலில் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story