அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறும்! - குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு
மின்சார வாகனங்களின் மவுனம் நாட்டில் புதிய மவுனப் புரட்சியைக் கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
காந்திநகர்,
இந்தியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் 40 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் குஜராத்தின் மகாத்மா மந்திர் மாநாட்டு மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற, அதை அடைய போக்குவரத்து ஒரு முக்கிய விஷயம்.
மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சத்தம் எழுப்பாமல் அமைதியாக உள்ளன. மின்சார வாகனங்களின் மவுனம் நாட்டில் புதிய மவுனப் புரட்சியைக் கொண்டு வருகிறது.
குஜராத்-மராட்டியம் புல்லட் ரெயில் வாரணாசியில் உள்ள ருத்ராட்ச மையத்திற்கு இயக்கப்பட்டது மற்றும் இதுபோன்ற பல வளர்ச்சித் திட்டங்கள் இந்தியா-ஜப்பான் நட்புறவுக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபே, இரு நாடுகளையும் நெருக்கமாக்க உழைத்தார். அதேபோல, தற்போதைய பிரதமர் புமியோ கிஷிடாவும் அதற்காக மேலும் உழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், ரூ.7,300 கோடி முதலீட்டில் குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தி நிலையம் அமைக்க அடிக்கல்லை இன்று பிரதமர் மோடி நாட்டினார்.