"உலக வர்த்தகத்தின் முக்கிய மையமாகும் இந்தியா" - பிரதமர் மோடி பெருமிதம்
எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரே அரசியல் கட்சி பாஜக என்று பிரதமர் மோடி கூறினார்.
கொச்சி,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற சக்தி கேந்திரா பொறுப்பாளர் சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
கேரளாவில் பாஜகவை வலுப்படுத்த உழைக்கும் கட்சியின் தொண்டர்களை சந்திப்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியான தருணம். உலக வர்த்தகத்தின் முக்கிய மையமாக இந்தியா மாறி வருகிறது. துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்புக்கு துறைமுகங்களே காரணம்.
கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்த்தல் மற்றும் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகியவற்றின் உள்கட்டமைப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு அதிகரிக்கும். இந்த வசதிகளுக்காக கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அதேசமயம் விக்சித் பாரதத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த பாதை சரியானது என்பதை இது காட்டுகிறது. லோக்சபா தேர்தல், நாட்டின் அரசை தேர்ந்தெடுக்கும்.
நாட்டு மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிப்பதே பாஜகவின் நோக்கம். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டு மக்களின் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ஜன் ஔஷதி கேந்திரா மூலம் மக்கள் 25,000 கோடி ரூபாய் சேமித்துள்ளனர். விரைவான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரே அரசியல் கட்சி பாஜக மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.