தொழில்நுட்ப முன்னணி நாடாக இந்தியா முன்னேறுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்


தொழில்நுட்ப முன்னணி நாடாக இந்தியா முன்னேறுகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
x

தொழில் நுட்ப முன்னணி நாடாக இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி பிரகதி மைதானத்தில் தேசிய தொழில்நுட்ப வார கொண்டாட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்த நாள், நாட்டின் வரலாற்றில் பெருமைக்குரிய ஒரு நாள் ஆகும். பொக்ரான் அணுகுண்டு சோதனையை விஞ்ஞானிகள் நடத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்த நாள் ஆகும்.

நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வேகத்தை வழங்குவதற்கான கருவி, தொழில் நுட்பம்தான். இது பொருளாதார வளர்ச்சிக்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும், அனைத்தையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் அவசியமானது ஆகும்.

தெளிவான இலக்குகள்

2047-ம் ஆண்டுக்கு (சுதந்திர நூற்றாண்டு), இந்தியா தெளிவான இலக்குகளை நிர்ணயித்துள்ளது. நாட்டை வளர்ந்த நாடாக, தற்சார்பு நாடாக ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் புதிய சிந்தனையுடன், முழுமையான அணுகுமுறையுடன் இந்தியா முன்னோக்கி நடைபோடுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் அறிவியல் தொழில்நுட்பத்துறைகளில் ஒரு வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

3-வது பெரிய நாடு

நாடு தொழில்நுட்பத்தின் சமூக சூழலைக் கருத்தில் கொண்டும், அங்கீகரித்தும் முன்னேறுகிறபோது, தொழில்நுட்பம் அதிகாரம் வழங்கும் ஒரு மாபெரும் ஊடகமாக மாறும்.

சமூக நீதியை உறுதி செய்வதிலும், சமூகத்தில் வேறுபாடுகளை களைவதிலும் தொழில்நுட்பம் மாபெரும் பங்களிப்பைச் செய்கிறது.

உலகளவில் இந்தியா 'ஸ்டார்ட்-அப்' சூழல் அமைப்பில் 3-வது பெரிய நாடாக உள்ளது. உலகம் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல்களை சந்தித்து வருகிற தருணத்தில், இந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பட்டுவாடா

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்களை புதுமைகளை நோக்கி வழிநடத்துவதற்கு வலுவான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடங்கள், இன்றைக்கு நாட்டின் புத்தாக்க நர்சரியாக மாறி வருகிறது.

இந்தியர்கள் டிஜிட்டல் பணப்பட்டுவாடா முறைக்கு மாறி உள்ளனர்.

ஒரு காலத்தில் சட்டைப்பையில் 'டெபிட் கார்டு'களையும், 'கிரெடிட் கார்டு'களையும் வைத்திருந்தது ஒரு அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டது உண்டு. ஆனால் இன்றைக்கு யு.பி.ஐ.என்று அழைக்கப்படுகிற ஒருங்கிணைந்த பணப்பட்டுவாடா முறை, எளிமையால் புதிய இயல்பாக மாறி விட்டது.

இந்தியா முன்னேறுகிறது

இன்றைக்கு இந்திய ஒரு தொழில்நுட்ப முன்னணி நாட்டுக்கு தேவையான அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.

விழாவின்போது, பிரதமர் மோடி தேசிய தொழில் நுட்ப வார நினைவு வார நாணயங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story