தகவல் பயன்பாட்டில் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக விழிப்புணர்வுடன் உள்ளது - ஜெய்சங்கர்


தகவல் பயன்பாட்டில் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக விழிப்புணர்வுடன் உள்ளது - ஜெய்சங்கர்
x

Image Courtacy: ANI

தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும் என்று வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

7வது உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து நடத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல் எனும் கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர், "இந்தியாவின் எழுச்சி அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும். இந்த விஷயத்தில் சில முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த நமது தகவல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றை யார் சேகரிக்கிறார்கள்? பராமரிக்கிறார்கள்? அந்த தகவல்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதுபோன்ற முக்கியமான கேள்விகள் விஷயத்தில் தற்போதுதான் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாகத்தான் நாம் விழிப்படைந்திருக்கிறோம்.

தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாதல் ஆகியவை அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைப் பிரச்சினைகளாகும் என்றும் அவை வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளாக மட்டும் பார்க்கக் கூடாது.

இந்தியாவில் அரசியல், தொழில்நுட்பத்துடன் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது. இதுதான் புதிய எரிபொருள். தொழில்நுட்பம் நடுநிலையானது. பொருளாதாரமோ அல்லது பிற விஷயங்களோகூட இந்த அளவுக்கு நடுநிலையானவை அல்ல. தொழில்நுட்பத்தின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க, அதன் அரசியல் பிணைப்பு பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைகிறது" என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.


Next Story