இந்தியாவில் புதிதாக 128 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் புதிதாக 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன்தினம் 99 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 100-ஐ கடந்து 128 ஆனது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 63 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு தினசரி பாதிப்பு விகிதம் 0.09 சதவீதமாக பதிவானது.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 250 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றில் இருந்து 96 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 713 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.
தொற்றால் நேற்று முன்தினம் போலவே நேற்றும் யாரும் நாட்டில் பலியாக வில்லை. இருப்பினும் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் 4-ஐ கணக்கில் காட்டியதால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 28 உயர்ந்தது. தற்போது நாட்டில் 1,792 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.