இந்தியா கூட்டணியுடன் ஒன்றுபட்டு போராட வேண்டும்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு


இந்தியா கூட்டணியுடன் ஒன்றுபட்டு போராட வேண்டும்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2023 7:12 PM IST (Updated: 16 Sept 2023 10:05 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியுடன் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி உள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த கமிட்டியில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த கமிட்டி கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, சச்சின் பைலட் மற்றும் சசி தரூர் எம்.பி. ஆகியோர் கமிட்டியில் சேர்க்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் உயரிய முடிவு எடுக்கும் மற்றும் அதனை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த கமிட்டி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி மறுசீரமைக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி கலந்து கொண்டார்.

அவர் கூட்டத்தில் ஒற்றுமைக்கான செய்தியை தெரியப்படுத்தினார். கூட்டத்தில் சோனியா காந்தி பேசும்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியுடன் ஒன்றுபட்டு காங்கிரஸ் கட்சி போராட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பேரணி வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், இந்த பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத் இன்று கூறினார்.

இதுபற்றி கட்சியின் தலைவர் கார்கே மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றும் எப்போது, எங்கே பேரணி நடைபெறும் என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.


Next Story