பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லியில் சர்வதேச மாநாடு: 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என தகவல்!
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த மாநாட்டை டெல்லியில் இம்மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி,
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான இரண்டு நாள் சர்வதேச மாநாடு அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த மாநாட்டை டெல்லியில் இம்மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150க்கும் மேற்பட்ட நாடுகளின் நிதி நுண்ணறிவு பிரிவுகள் (பைனான்ஷியல் இன்டெலிஜென்ஸ் யூனிட்ஸ்), கூட்டாக எக்மோண்ட் குழு என்று அழைக்கப்படுகின்றது. இது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி செல்லும் வழிகளை கண்டறிந்து தடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
சர்வதேச அளவில், 'நிதி நுண்ணறிவு பிரிவு' இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதால், டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.