'அனைவரும் நேர்மையாக கடமையாற்றினால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும்' - யோகி ஆதித்யநாத்
பிரதமர் மோடியின் ஆட்சியில் புதிய இந்தியா உருவாகி வருவதாக உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 'விக்சித் பாரத் யாத்ரா' நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், "பிரதமர் மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். சுமார் 4 கோடி ஏழை மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
மேலும் இலவச கழிப்பறைகள், உஜ்வாலா திட்டத்தின்கீழ் இலவச எரிவாயு இணைப்புகள், இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தில் இலவச பரிசோதனைகள், இலவச சிகிச்சைகள் மற்றும் இலவச தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நேர்மையாக கடமையாற்ற வேண்டும். மேலும் சமூக பொறுப்புணர்வு மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதோடு நாம் நமது பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள வேண்டும், அடிமை மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்" என்று தெரிவித்தார்.