படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் - இந்திய ரெயில்வே திட்டம்


படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் - இந்திய ரெயில்வே திட்டம்
x

படுக்கை வசதியுடன் கூடிய 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இந்திய ரெயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். எனப்படும் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு டெல்லி-வாரணாசி, டெல்லி-கத்ரா இடையே இயக்கப்படுகிறது.

இதேபோல் மேலும் 4 வந்தே பாரத் ரெயில்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. தற்போது 7-வது வந்தே பாரத் ரெயில் தயாரிக்கும் பணியை சென்னை ஐ.சி.எப். தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தலா 16 பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளது.

வந்தே பாரத் ரெயில் தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஆனாலும் இந்த ரெயிலில் சேர்கார் வசதியுடன் அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன.

வந்தே பாரத் ரெயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 4, ஒரு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறுகிறது. ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 61 படுக்கைகளும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 48 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் 24 படுக்கைகளும் இடம்பெறுகிறது. இந்த பெட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் உதவியாளருக்கு படுக்கையுடன் ஒரு இடம் ஒதுக்கப்படும்.

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ரெயில்வே துறை டெண்டர் அழைப்பு விடுக்கிறது. படுக்கை வசதியுடன் மொத்தம் 200 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய வந்தே பாரத் ரெயில்கள் சென்னை ஐ.சி.எப். மற்றும் மராட்டிய மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலை ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story