இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்தது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை


இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்தது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
x

இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்துள்ளதால், மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம்,

வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது.

இந்தியாவில் குரங்கு அம்மை நுழையாமல் இருந்தது. இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேரள மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

அந்த நபர், வெளிநாட்டில் இருந்தபோது குரங்கு அம்மை நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். கேரளா திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டன. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், அவருக்கு குரங்கு அம்மை வந்திருப்பது உறுதி ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே குரங்கு அம்மை உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

இதற்கிடையே, குரங்கு காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் குரங்கு அம்மை தொடர்ந்து பரவி வருவதை பார்த்தால், இந்தியாவிலும் பொது சுகாதார நடவடிக்கைளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, மாநிலத்தின் நுழைவுவாயிலில், அறிகுறிகள் கொண்ட ஒவ்வொருவரையும் பரிசோதிக்க வேண்டும். அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அடிக்கடி பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். சிகிச்சை அளிக்க வேண்டிய ஆஸ்பத்திரிகளை அடையாளம் காண்பதுடன், அங்கு போதிய ஊழியர்களும், உபகரணங்களும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story