மத்திய அரசின் சுகாதார திட்டங்களால் 8 மாநிலங்களில் பேறுகால இறப்பு வீதம் குறைப்பு


மத்திய அரசின் சுகாதார திட்டங்களால் 8 மாநிலங்களில் பேறுகால இறப்பு வீதம் குறைப்பு
x

கோப்புப்படம்

மத்திய அரசின் சுகாதார திட்டங்களால் 8 மாநிலங்களில் பேறுகால இறப்பு வீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பேறுகால இறப்புவீதம் குறைந்துள்ளதாக இந்திய தலைமை பதிவாளர் சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-2016-ம் ஆண்டில் பேறுகால இறப்பு 130 ஆகவும், 2015-2017-ம் ஆண்டில் 122 ஆகவும், 2016-2018-ல் 113 ஆகவும், 2017-2019-ல் 103 ஆகவும், 2018-2020-ம் ஆண்டில் 97 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.

தேசிய சுகாதார கொள்கையின் அடிப்படையில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கை முன்பு 6 மாநிலங்கள் எட்டியிருந்த நிலையில் தற்போது 8 மாநிலங்கள் எட்டியுள்ளன.

அதன்படி கேரளாவில் 19, மராட்டிய மாநிலத்தில் 33, தெலுங்கானாவில் 43, ஆந்திராவில் 45, தமிழகத்தில் 54, ஜார்கண்டில் 56, குஜராத்தில் 57, கர்நாடகத்தில் 69 என்ற அளவில் பேறுகால இறப்பு வீதம் உள்ளது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

2014-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் பேறுகால இறப்பை குறைத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story