இந்திய-இங்கிலாந்து கூட்டு ராணுவ பயிற்சி; பஜ்ரங்பலி கி ஜெய் முழக்கமிட்ட ராணுவ வீரர்கள்


இந்திய-இங்கிலாந்து கூட்டு ராணுவ பயிற்சி; பஜ்ரங்பலி கி ஜெய் முழக்கமிட்ட ராணுவ வீரர்கள்
x

இங்கிலாந்து நாட்டு ராணுவத்துடன் இணைந்து இந்தியா மேற்கொண்ட கூட்டு ராணுவ பயிற்சியில் பஜ்ரங்பலி கி ஜெய் என வீரர்கள் முழக்கமிட்டனர்.

லண்டன்,

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ராணுவ வீரர்கள் இடையே கூட்டு ராணுவ பயிற்சியானது அஜேயா வாரியர்-23 என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி தொடங்கி மே 11-ந்தேதி (இன்று) வரை நடைபெற்றது.

இதற்காக இந்திய விமான படையின் சி-17 என்ற எண் கொண்ட விமானத்தில் இந்திய ராணுவ வீரர்கள், இங்கிலாந்தின் சாலிஸ்பரி பிளைன்ஸ் பகுதிக்கு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி புறப்பட்டு சென்றடைந்தனர்.

இதன் நிறைவு நாளான இன்று இந்திய ராணுவ படைகள் கோஷங்களை எழுப்பினர். போரில், வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தைரியம் ஏற்படுத்தும் வகையில் அல்லது பகைவர்களை அச்சுறுத்துவதற்காக வீர முழக்கங்களை எழுப்புவது வழக்கம்.

அதன்படி இன்று நடந்த கூட்டு ராணுவ பயிற்சி நிறைவில், பாரத் மாதா கி ஜெய் என்றும் மற்றும் பஜ்ரங்பலி கி ஜெய் என்றும் இந்திய வீரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இரு நாடுகளின் நட்புறவை வளர்க்கும் நோக்குடன், ராஜதந்திர போர் பயிற்சி முறைகளை வெளிப்படுத்துவது, தங்களை புதுப்பித்து கொள்வது மற்றும் இரு தரப்பிலும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, கற்று கொள்வது உள்ளிட்டவை இதன் முக்கிய நோக்கங்களாக உள்ளன. நாடுகள் இடையே இருதரப்பு உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் வகையிலும் இந்த போர் பயிற்சி அமையும்.


Next Story