மத்திய பிரதேசத்தில் கோவில் கிணறு இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு


மத்திய பிரதேசத்தில் கோவில் கிணறு இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
x

மத்திய பிரதேசத்தில் ராம நவமி வழிபாட்டின் போது கோவிலில் உள்ள படிக்கட்டு கிணற்றின் மூடி சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் அருகே உள்ள படேல் நகரில் பழமை வாய்ந்த பாலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. ராம நவமியையொட்டி இங்கு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் குழுமியிருந்தனர்.

இதில் சிலர் அங்குள்ள கிணறு ஒன்றின் மேற்கூரையில் (சிலாப்) நின்றிருந்தனர். இதனால் பாரம் தாங்காமல் அந்த கூரை இடிந்து விழுந்தது. இதில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் பேர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

30 அடிக்கு மேல் ஆழம் உள்ள அந்த கிணற்றில் தண்ணீர் அதிக அளவு இல்லாததால் கிணற்றுக்குள் விழுந்த பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். மேலும் சக பக்தர்களும் இந்த மீட்பு பணிகளுக்கு உதவினர்.

இந்த பயங்கர சம்பவத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. கிணற்றில் விழுந்த ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பல மணி நேர போராட்டத்துக்குப் பின் கிணற்றில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


Next Story