பெங்களூருவில் மனைவி-மகளுடன் தொழில்அதிபர் தீக்குளித்து தற்கொலை
பெங்களூருவில் மனைவி, மகளுடன் தொழில்அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு:
கேரள தொழில்அதிபர்
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 3-வது செக்டார், 19-வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சந்தோஷ் (வயது 58), தொழில்அதிபர். இவரது மனைவி ஹேமனா சந்தோஷ் (53). இந்த தம்பதியின் மகள் அனுஷா (19). சந்தோசின் சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும். அவர், கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பொம்மனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு எந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை சந்தோஷ் நடத்தி வந்தார். நேற்று அதிகாலை 5.45 மணியளவில் சந்தோஷ் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
தீக்குளித்து தற்கொலை
உடனே தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் உள்ளே சென்றனர். மேலும் வீட்டில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். அதே நேரத்தில் வீட்டின் ஒரு அறையில் சந்தோஷ், அவரது மனைவி ஹேமனா, மகள் அனுஷா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தார்கள். சந்தோஷ் தனது மனைவி, மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு சந்தோஷ் உள்பட 3 பேரும் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்து உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது.
கடன் தொல்லையால் விபரீதம்
மேலும் சந்தோஷ் நடத்தி வரும் தொழிற்சாலையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு நபர்களிடம் அவர் கடன் வாங்கி இருந்தார். கடனை திரும்ப கொடுக்க முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இருப்பினும் வேறு ஏதாவது தற்கொலைக்கு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.