"அவமதித்த பாஜக தலைமை.. கர்நாடக தெருக்களில் எடியூராப்பாவின் கண்ணீர்" - டி.கே.சிவக்குமார் பரபரப்பு கருத்து..!
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதியதாக 16-வது சட்டசபை தேர்வு செய்வதற்காக கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக தேர்தலையொட்டி தனியார் தொலைக்காட்சி நிகழ்சியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் எனவும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு திருப்பி வழங்கப்படும். எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கும் சூழலில், எடியூரப்பாவை பாஜக அவமதித்துவிட்டது. எடியூரப்பாவுக்கு கட்சி தலைமையும், விசாரணை முகமைகளும் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும், அவரது கண்ணீர் கர்நாடக தெருக்களில் பாய்வதாக சிவக்குமார் கூறினார்.
மேலும் காங்கிரஸ் வென்றால் முதல்வர் அரியணைக்கான போட்டியில் இருக்கும் அவரிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, இது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்யாதது குறித்து பேசியிருக்கும் அவர், தாங்கள் மாநில பிரச்சினைக்காக போராடுகிறோம் என்றவர், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் மாநிலத்தை ஆள முடியாது என்றார்.