மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்


மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்
x

நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 63 காசுகள் கிடைக்கின்றன.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு - செலவு குறித்த விவரம் வருமாறு:

நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், 63 காசுகள் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கின்றன. கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 28 காசுகள் கிடைக்கின்றன. பங்கு விற்பனை போன்ற வரி அல்லாத வருவாயிலிருந்து 7 காசுகள், கடன் அல்லாத முதலீட்டு வருவாய் மூலம் 1 காசு கிடைக்கிறது.

கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியை உள்ளடக்கிய நேரடி வரிகளிலிருந்து மட்டும் 36 காசுகள் வரும். அதாவது, வருமான வரி மூலம் 19 காசுகளும், கம்பெனி வரி மூலம் 17 காசுகளும் கிடைக்கும். மறைமுக வரிகளில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் அதிகபட்சமாக 18 காசுகள் கிடைக்கும். 5 காசுகள் கலால் வரி மூலமாகவும், 4 காசுகள் சுங்க வரி மூலமாகவும் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.

செலவைப் பொருத்தவரை ஒவ்வொரு ரூபாயிலும் அதிகபட்சமாக வட்டி செலுத்துவதற்கு 20 காசுகள் செலவு செய்யப்படுகிறது. இதேபோல் மாநிலங்களின் வரி பகிர்வுக்கும் 20 காசுகள் செலவாகிறது. நாட்டின் பாதுகாப்புக்கான ஒதுக்கீடாக 8 காசுகள் செலவிடப்படுகிறது.

மத்திய அரசுத் துறைகளின் திட்டங்களுக்காக 16 காசுகளும், மத்திய நிதியுதவி திட்டங்களுக்காக 8 காசுகளும் செலவிடப்படும். நிதி ஆணையம் மற்றும் பிற இடமாற்றங்களுக்கான செலவு 8 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு முறையே 6 காசுகள் மற்றும் 4 காசுகள் கணக்கில் கொள்ளப்படுகிறது. 9 காசுகள் பிற செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்.


Next Story