பி.டி.ஏ. குடியிருப்பு விவகாரத்தில் ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு: எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
பெங்களூருவில் பி.டி.ஏ. குடியிருப்பு விவகாரத்தில் ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
ரூ.12 கோடி லஞ்ச புகார்
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்தார். அப்போது, பெங்களூரு வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ) சார்பில் ரூ.600 கோடியில் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர் டி.ஜே.அபிரகாம் குற்றச்சாட்டு கூறினார். அதாவது அந்த டெண்டரை எடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் அதிபரான சந்திரகாந்த் ராமலிங்கத்திடம் இருந்து ரூ.12 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், எடியூரப்பா, அவரது குடும்பத்தினர், கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் டி.ஜே.ஆபிரகாம் கூறினார்.
இதுதொடர்பாக பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் எடியூரப்பா முன்னாள் முதல்-மந்திரி என்பதால், அவர்மீது வழக்கு தொடர கவர்னரின் அனுமதி வேண்டும் என்பதாலும், கவர்னர் அனுமதி அளிக்காத காரணத்தாலும் மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு டி.ஜே.அபிரகாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டுக்கு உத்தரவு பிறப்பித்தது.
எடியூரப்பா மீது வழக்கு
மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் ரூ.12 கோடி லஞ்ச விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் உள்ள லோக் அயுக்தா போலீசார், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர், தமிழ்நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் சந்திரகாந்த் ராமலிங்கம், எடியூரப்பாவின் மருமகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவருக்கு சிக்கல் உருவானது. அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்களும் பரவியது.
இதையடுத்து, தன் மீது லோக் அயுக்தா போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி எடியூரப்பா மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால தடை
அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது எடியூரப்பா தரப்பில் ஆஜரான வக்கீல், தனது மனுதாரர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் புகாருக்கு கவர்னர் அனுமதி வழங்கவில்லை. கவர்னர் அனுமதி வழங்காத பட்சத்தில் ஐகோர்ட்டு உத்தரவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி சந்திரசூட் அதிரடி உததரவு பிறப்பித்தார். இந்த மனு மீது 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி அரசுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், மந்திரி சோமசேகர், எடியூரப்பா மகன் விஜயேந்திரா உள்ளிட்ட வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.