பா.ஜ.க.வில் சேர நிர்பந்தம்; ஆம் ஆத்மி மந்திரி அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு


பா.ஜ.க.வில் சேர நிர்பந்தம்; ஆம் ஆத்மி மந்திரி அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 April 2024 5:55 AM GMT (Updated: 2 April 2024 6:09 AM GMT)

பா.ஜ.க.வில் ஒரு மாதத்திற்குள் சேரவில்லை என்றால் அமலாக்கத்துறையினரால் நான் கைது செய்யப்படுவேன் என என்னிடம் கூறினார்கள் என்று ஆம் ஆத்மி மந்திரி அதிஷி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், முக்கிய புள்ளியாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

இதற்காக, கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர். அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் முடிவடைந்ததும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆம் ஆத்மியின் மந்திரி அதிஷி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, எனக்கு நெருங்கிய உதவியாளர் ஒருவர் வழியே பா.ஜ.க.வினர் என்னை அணுகினார்கள். என்னுடைய அரசியல் வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நான் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என என்னிடம் கூறினார்கள்.

ஒரு மாதத்திற்குள் கட்சியில் சேரவில்லை என்றால் அமலாக்கத்துறையினரால் நான் கைது செய்யப்படுவேன் என்றும் என்னிடம் கூறினார்கள் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன், இன்னும் 2 மாதங்களில் ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சத்தா ஆகிய 4 தலைவர்களை அவர்கள் கைது செய்வார்கள் என அதிஷி கூறியுள்ளார்.

இதற்கு ஏற்றாற்போல், சவுரப் பரத்வாஜ் மற்றும் என்னுடைய பெயரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் கூறினார்கள். டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டபோதும், ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையாகவும் மற்றும் வலிமையாகவும் உள்ளது என பா.ஜ.க. உணர்ந்திருக்கிறது.

அதனால், கட்சியில் அடுத்த நிலையிலுள்ள தலைவர்களை சிறையில் அடைக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என அதிஷி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Next Story