பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை


பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை
x

பா.ஜனதாவின் 3½ ஆண்டு ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

40 சதவீத கமிஷன்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு முன்பு கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா 3½ ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றிருந்தது. பா.ஜனதா ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர கொரோனா சந்தர்ப்பத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கியது, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறி இருந்தது.

அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் விவகாரத்தை முன்வைத்தே காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்திருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். இந்த நிலையில், பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையாவையும், டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள்.

விசாரணை நடத்த வேண்டும்

அவ்வாறு பேசுபவர்கள் கடந்த 3½ ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் பெற்றது, கொரோனா சந்தப்பர்த்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்ட அனைத்து முறைகேடுகள் குறித்தும் உரிய முறையில் விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் மந்திரிகள் சிலரும், இதே கருத்தை சித்தராமையா, டி.கே.சிவக்குமாரிடம் கூறி, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஊழல் குறித்து விசாரணை

பா.ஜனதா ஆட்சியில் கடந்த 3½ ஆண்டுகளில் அரசு பணிகள், திட்டங்களுக்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றி பரிசீலனை நடத்தும்படி என்னிடம் முதல்-மந்திரி சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார். அதற்கான பொறுப்பையும் என்னிடம் அவர் ஒப்படைத்திருக்கிறார். எனவே பா.ஜனதா ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல், பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. நிதித்துறையை தன்வசம் வைத்து கொள்ளும் முதல்-மந்திரி சித்தராமையா, அந்த துறையை தனது குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இதுவரை கருதி வருகிறார். எனவே ஒரு ரூபாய் கூட வித்தியாசம் ஏற்படவோ, அரசுக்கு இழப்பு ஏற்படவோ விடுவதில்லை. முதல்-மந்திரியின் உத்தரவின்பேரில் நிபுணர்களுடன் கலந்து ஆலோசிப்பேன். இதுபற்றிய தகவல் கூடிய விரைவில் வழங்கப்படும். ஊழலுக்கு ஒரு முடிவு கட்டப்படும்.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story