பி.பி.சி அலுவலக சோதனை: பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை - வருமான வரித்துறை விளக்கம்


பி.பி.சி அலுவலக சோதனை: பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை - வருமான வரித்துறை விளக்கம்
x

பி.பி.சி நிறுவனம் பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத் இனக்கலவரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக காட்டும் 2 ஆவணப்படங்களை லண்டன் பி.பி.சி நிறுவனம் எடுத்து வெளியிட்டது. இதை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இருப்பினும் டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.

அதன்படி பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Next Story