கார்கேவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயாரா?; மந்திரி கோவிந்த்கார்ஜோள் சவால்


கார்கேவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயாரா?; மந்திரி கோவிந்த்கார்ஜோள் சவால்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயாரா? என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை

காங்கிரஸ் கட்சி அழியும் நிலையில் உள்ளது. கட்சியை காப்பாற்ற ராகுல்காந்தி புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார். ராகுல்காந்தியின் முயற்சி எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை. ராகுல்காந்தி பாதயாத்திரைக்காக வைக்கப்பட்டு இருந்த பேனரை கிழித்த விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. காங்கிரசாரே பேனரை கிழித்து விட்டு பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

அந்த பேனர் கன்னட மொழியில் இல்லாத காரணத்தால், கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் கூட கிழித்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. காங்கிரஸ் தலைவர்களுக்கு, பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது மட்டுமே வேலையாக உள்ளது. 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் செய்த சாதனைகள் பற்றி சொல்ல முடியாததால், பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

பெரிய தலைவர் இல்லை

ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதால் பா.ஜனதாவுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட போவதில்லை. பிரதமர் மோடிக்கு நிகரான அளவுக்கு ராகுல்காந்தி பெரிய தலைவரும் இல்லை. பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இல்லை. அவா்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க போவதும் இல்லை.

முதல்-மந்திரி பதவிக்காக டி.கே.சிவக்குமாருக்கு, சித்தராமையாவுக்கும் இடையே பெரிய மோதல்களே நடக்கிறது. முதல்-மந்திரி பதவி காலி இல்லை என்று தெரிந்தும் 2 பேரும் மோதிக் கொள்கிறார்கள்.

கார்கேவை...

மல்லிகார்ஜுன கார்கேவை காங்கிரஸ் தொடர்ந்து ஏமாற்றியே வந்திருக்கிறது. 11 முறை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவியை காங்கிரஸ் வழங்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி கொடுப்பதால், தலித்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவில்லை. காங்கிரசுக்கு தலித்துகள் மீது உண்மையிலேயே அக்கறை கிடையாது.

அவ்வாறு அக்கறை இருந்தால் மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயாரா? என்று சவால் விடுகிறேன். 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story