வெளிநாட்டு வாழ் கன்னடர்கள் ஓட்டுப்போட வாய்ப்பு?


வெளிநாட்டு வாழ் கன்னடர்கள் ஓட்டுப்போட வாய்ப்பு?
x
தினத்தந்தி 20 April 2023 6:45 PM GMT (Updated: 20 April 2023 6:46 PM GMT)

வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்களுக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட வாய்ப்பு வழங்குவது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:-

வாக்களிக்க வாய்ப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்கள், கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி உள்ளனர். அதாவது வெளிநாடுகளில் வசிக்கும் எங்களால் வருகிற 10-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்து ஜனநாயக கடமையாற்ற முடியாத காரணத்தால், தூதரங்களில் தபால் ஓட்டுப்போட அனுமதி வழங்க வேண்டும்.

5 லட்சம் பேருக்கு ஓட்டு

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தேர்தலுக்காக இந்தியாவுக்கு திரும்ப முடியாததால், தபால் ஓட்டு அல்லது வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் தங்களது வாக்குரிமையை செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்திய தேர்தலில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தேர்தல்களில் ஓட்டுப்போட வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story