ராமர் அசைவமா..? மராட்டிய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு ராமர் கோவில் தலைமை பூசாரி கண்டனம்


ராமர் அசைவமா..? மராட்டிய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு ராமர் கோவில் தலைமை பூசாரி கண்டனம்
x

கடவுள் ராமர் குறித்து ஜிதேந்திர அவாத் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லக்னோ,

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத், சீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "கடவுள் ராமர் ஒரு பகுஜன் ஆவார். அவர் நமக்கு சொந்தமானவர். ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?

நமக்கு ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்" என்று கூறினார். அயோத்தி ராமர் கோவில் வரும் 22-ந் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், கடவுள் ராமர் குறித்து ஜிதேந்திர அவாத் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், ஜிதேந்திர அவாத்தின் பேச்சுக்கு அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் அசைவம் சாப்பிட்டதாக ஜிதேந்திர அவாத் கூறிய கருத்தை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திரா அவாத் பேசியது முற்றிலும் தவறானது. வனவாசத்தின்போது ராமர் அசைவ உணவு உண்டதாக நமது சாஸ்திரங்களில் எங்கும் எழுதப்படவில்லை. அவர் பழங்களை சாப்பிட்டார் என்று எழுதப்பட்டுள்ளது.

இப்படி பொய் பேசும் நபருக்கு நமது பகவான் ராமரை அவமதிக்க எந்த உரிமையும் இல்லை. எங்கள் கடவுள் எப்போதும் சைவ உணவு உண்பவர். ராமரை அவமதிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளை அவர் பேசி வருகிறார்."

இவ்வாறு ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜிதேந்திர அவாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை காவல்நிலையத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம் கதாம் புகார் அளித்துள்ளார்.


Next Story