இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டு கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு


இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டு கொல்ல வேண்டும்:  காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2023 4:22 PM IST (Updated: 19 Nov 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் பேரணியில் பேசியுள்ளார்.

திருவனந்தபுரம்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

கேரளாவில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, காசர்கோடு பகுதியை சேர்ந்த ஐக்கிய முஸ்லிம் ஜமாத் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில், காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ஜெனீவா உடன்படிக்கையின் கீழுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் கேட்கலாம்.

2-ம் உலக போருக்கு பின்னர், போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை (நாஜிக்கள்) நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான விசாரணை நடந்தது. அப்போது, போர் குற்றவாளிகளை விசாரணையின்றி சுட்டு கொல்லும் நடைமுறை இருந்தது.

இது இஸ்ரேல் பிரதமருக்கும் பொருந்தும். உலகத்தின் முன் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக நிற்கிறார். பாலஸ்தீனர்கள் மீது அவருடைய படைகளை அனுப்பி அராஜகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அதனால், விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் நெதன்யாகுவை சுட்டு கொல்வதற்கான நேரமிது என பேசி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

1 More update

Next Story