பா.ஜனதாவால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியாதது வெட்கக்கேடானது


பா.ஜனதாவால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியாதது வெட்கக்கேடானது
x
தினத்தந்தி 8 July 2023 9:43 PM GMT (Updated: 9 July 2023 10:14 AM GMT)

2 மாதங்கள் ஆகியும் பா.ஜனதாவால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியாதது வெட்கக்கேடானது என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கூறி உள்ளார்.

மைசூரு:-

பட்ஜெட்டுக்கு வரவேற்பு

முன்னாள் மந்திரியும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்தராமையா கா்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இது சிறந்த பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. கல்வி, உணவு, ஆரோக்கியம், மகளிர் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டை நான் வரவேற்கிறேன்.

பொது நூலகங்களுக்கு கன்னட புத்தகங்களை வழங்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியதுடன் மூலம் இது கன்னடர்களின் அரசு என்பதை சித்தராமையா நிரூபித்துள்ளார். நாடோடி சமூகத்தை பற்றி முந்தைய அரசு சிந்திக்கவில்லை. ஆனால் சித்தராமையா தலைமையிலான அரசு அந்த சமூக மக்களை பற்றி சிந்தித்து அவர்களின் வளர்ச்சிக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். இது உண்மையிலேயே பாராட்டக்கூடியது.

வெட்கக்கேடானது

தேர்தலில் அறிவித்தப்படி 5 உத்தரவாத திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். உத்தரவாத திட்டங்கள் வேண்டாம் என நினைப்பவர்கள் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த திட்டங்களின் பலன் தங்களுக்கு வேண்டாம் என விட்டு கொடுத்தால் அது மாநிலத்துக்கு நல்லதாகும். உண்மையான ஏழை மக்களுக்கு இந்த திட்டம் சென்றடைய வேண்டும்.

கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சி தலைவர் இல்லாதது வெட்கக்கேடானது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் நடந்த நிகழ்வுகளையும், சட்டசபையில் நடந்த நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும்போது, குமாரசாமி தான் எதிர்க்கட்சி தலைவராக உள்ளாரோ என தோன்றுகிறது. பா.ஜனதாவினர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குமாரசாமிக்கு ஒப்படைத்துவிட்டனர். 2 மாதங்கள் ஆகியும் பா.ஜனதாவால் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை கூட தெர்ந்தெடுக்க முடியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story