கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி; நளின்குமார் கட்டீல் நம்பிக்கை


கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி; நளின்குமார் கட்டீல் நம்பிக்கை
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:47 PM GMT)

கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி என்று நளின்குமார் கட்டீல் நம்பிக்கை.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல்கள் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பிற கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர். இதில் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-

இன்று (நேற்று) முன்னாள் எம்.எல்.ஏ. நந்திஹள்ளி ஹாலப்பா, ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் அப்பாஜி கவுடா போன்றவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதாவின் கொள்கை-கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜனதாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பா.ஜனதா தான் நம்பிக்கையான கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள். அவரவர் தகுதிக்கு ஏற்பட கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி. பா.ஜனதாவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.


Next Story