பாஜகவை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை - ஜெய்ராம் ரமேஷ்


பாஜகவை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை - ஜெய்ராம் ரமேஷ்
x

பாஜகவை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி அமைவது சாத்தியம் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணி உருவானால், அதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஆனாலும் இதையெல்லாம் பேசுவதற்கு காலம் வந்து விடவில்லை.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை, வரவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலும், அதைத் தொடர்ந்து தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களின் சட்டசபை தேர்தலும்தான். நாங்கள் இதில் கவனம்செலுத்துவோம். பாராளுமன்ற தேர்தல் பற்றி அப்புறம் பார்ப்போம்.

அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்பதில் 16 கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு எழுதிய கடிதத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கையெழுத்து போடவில்லை. ஆனால் அவர்கள் ஆதரவு தரத்தான் செய்கிறார்கள்.

அதானி நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 93 கேள்விகள் எழுப்பி உள்ளன. 100 என்ற எண்ணிக்கையை அடைவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை முற்றிலும் அவசியம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மாற்று இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story