கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேர் தேர்வு


கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேர் தேர்வு
x
தினத்தந்தி 23 Jun 2023 9:01 PM GMT (Updated: 24 Jun 2023 10:27 AM GMT)

கர்நாடக மேல்-சபையில் காலியாக இருந்த 3 உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் காலியாக இருந்த 3 உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

3 உறுப்பினர்கள் ராஜினாமா

கர்நாடக மேல்-சபை 75 உறுப்பினர்களை கொண்டதாகும். அதன்படி, மேல்-சபை உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் சட்டசபை தேர்தலுக்கு முன்பு தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பாபுராவ் சின்சனசூரின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வரையும், ஆர்.சங்கரின் பதவி காலம் வருகிற 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரையும், லட்சுமண் சவதியின் பதவி காலம் வருகிற 2028-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வரையும் இருந்தது.

அவர்கள் 3 பேருமே பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களது ராஜினாமா காரணமாக கர்நாடக மேல்-சபையில் 3 இடங்கள் காலியாக இருந்தது. அந்த 3 இடங்களுக்கும் வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்றிருந்தது.

ஜெகதீஷ் ஷெட்டர் மனு தாக்கல்

அன்றயை தினம் தமிழ்நாட்டின் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். அதே நேரத்தில் ஆளும் காங்கிரஸ் சார்பில் மேல்-சபை உறுப்பினர்கள் பதவிக்காக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகிய 3 பேரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கடந்த 20-ந் தேதி ஜெகதீஷ் ஷெட்டர், என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகிய 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மேல்-சபை இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.

3 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டை சேர்ந்த பத்மராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததாலும், அவர்கள் தங்களது மனுக்களை திரும்ப பெறாத காரணத்தாலும் ஜெகதீஷ் ஷெட்டர், என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகிய 3 பேரும் கர்நாடக மேல்-சபை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்பதால், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் சார்பில் யாரும் போட்டியிடாமல் இருந்திருந்தனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட 3 பேரும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் கர்நாடக மேல்-சபையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பலம் 27 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story