ஜெகதீஷ் ஷெட்டாரை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறிந்து விடுவார்கள்: பசவராஜ் பொம்மை


ஜெகதீஷ் ஷெட்டாரை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறிந்து விடுவார்கள்: பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 17 April 2023 7:58 AM GMT (Updated: 17 April 2023 12:21 PM GMT)

காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டாரை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறிந்து விடுவார்கள் என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டார். வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக அக்கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனால், கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நேற்று கூறும்போது, கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர் என்றொரு குற்றச்சாட்டை கூறினார்.

கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என கூறினார். இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்து உள்ளார்.

அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

இதன்பின் திரும்பிய அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்கப்பட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.

கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டார் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்-மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என்று கட்சி அறிவுறுத்தி உள்ளது என கூறப்படுகிறது.

இதனால், அவரது ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் இருந்து உள்ளனர். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என்றும் ஷெட்டார் குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள், மல்லிகார்ஜூன கார்கே, டி.கே. சிவக்குமார், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்து உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது.

இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா மற்றும் தேவராஜ் அர்ஸ் ஆகியோரை வெளியேற்றிய கட்சிக்கு அவர் சென்றிருக்கிறார்.

முதலில் கவுரவம் கிடைக்கும். தேர்தலுக்கு பின்பு அவருக்கு அவமதிப்பு கிடைக்கும். ஜெகதீஷ் ஷெட்டாரை பயன்படுத்தி விட்டு, தூக்கி எறிந்து விடுவார்கள் என கூறியுள்ளார். பி.எஸ். எடியூரப்பா எங்களுடன் இருக்கும்வரை, லிங்காயத்துகள் எங்களுடன் இருப்பார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


Next Story