ஜெகதீஷ் ஷெட்டர் விலகியதால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு


ஜெகதீஷ் ஷெட்டர் விலகியதால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு
x

ஜெகதீஷ் ஷெட்டர் விலகியதால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜெகதீஷ் ஷெட்டர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். வடகர்நாடகத்தில் முக்கிய தலைவராக இருக்கிறார். பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் கட்சி மேலிடம் சில முடிவுகளை எடுக்கிறது. அரசியலில் சில மாற்றங்களை கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். ஜெகதீஷ் ஷெட்டருக்கு டெல்லி அளவில் பெரிய பதவி வழங்குவதாக கட்சி மேலிடம் கூறியது. அவர் கை காட்டும் ஒருவருக்கு டிக்கெட் வழங்க கட்சி தயாராக இருப்பதாக நான் அவரிடம் பேசும்போது கூறினேன். ஆனால் இதை அவர் ஏற்கவில்லை. அவர் எங்கள் கட்சியிலேயே நீடித்து இருந்தால் அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்குமாறு நாங்கள் கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்தோம். கட்சி மேலிடம் தான் அவரது பெயரை கைவிட்டது. மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது. புதிய தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதனால் தான் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஜெகதீஷ் ஷெட்டர் வெளியேறியதால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் அந்த பாதிப்பை குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story