ஜம்மு: கைது செய்யப்பட்ட பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பில்லை என மறுப்பு


ஜம்மு:  கைது செய்யப்பட்ட பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பில்லை என மறுப்பு
x

ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீசார் கைது செய்த லஷ்கர் பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பில்லை என அக்கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் டக்சன் தோக் கிராமத்தில், போலீசாரால் தேடப்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதியான தலிப் உசைன் ஷா மற்றும் அவரது கூட்டாளி பைசல் அகமது தர் ஆகியோர் தஞ்சமடைந்து இருந்தனர்.

அவர்களை கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து நேற்று காலை சிறை பிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 ஏ.கே. ரக துப்பாக்கிகள், பல்வேறு எறிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதன்பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பதானியா கூறும்போது, இந்த கைது நடவடிக்கையால் புது விவகாரம் எழுந்துள்ளது. பா.ஜ.க.வுக்குள் நுழைய இது ஒரு புது மாதிரியான முயற்சி. லாபம் அடைகின்றனர்.

உயர் பதவியில் உள்ள தலைவர்களை கொல்வதற்கான சதி திட்டமும் போலீசாரால் முறியடிக்கப்பட்டு உள்ளது.

எல்லைக்கு அந்த பக்கம், பயங்கரவாதம் பரவ செய்வதற்கான விருப்பமுள்ள ஆட்கள் உள்ளனர். தற்போது ஆன்லைன் வழியே, யார் வேண்டுமென்றாலும் பா.ஜ.க.வின் உறுப்பினர் ஆகலாம் என்று உள்ளது. இது ஒரு பின்னடைவு என்றே நான் கூறுவேன். ஆன்லைன் வழியே உறுப்பினர் ஆகும் நபர்களின் குற்ற பின்னணி அல்லது முன்பு செய்த செயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான எந்த நடைமுறையும் கிடையாது என கடுமையாக கூறியுள்ளார்.

கடந்த மே 9ந்தேதி, ஜம்முவில் பா.ஜ.க.வின் ஐ.டி. மற்றும் சமூக ஊடகத்திற்கான தலைவராக ஷா நியமிக்கப்பட்டார். அவருக்கு, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு அணியின் பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது என பா.ஜ.க. தெரிவித்து இருந்தது. காஷ்மீரின் பா.ஜ.க. தலைவர் ரவீந்திர ரெய்னா உள்பட பல மூத்த தலைவர்களுடன் ஷா ஒன்றாக உள்ள புகைப்படங்களும் உள்ளன.

இதில், துணிச்சலாக செயல்பட்டதற்காக கிராமவாசிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கிராமவாசிகளின் தைரியத்திற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என்றும் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் 2 குண்டுவெடிப்புகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதில் உசைன் ஷாவுக்கு உள்ள தொடர்பு பற்றிய சந்தேகத்தின்பேரில் போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கும் கூடுதலாக அவரை கண்காணித்து வந்தனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், கிராமவாசிகளால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.க. டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த செய்தி போலியானது. அவர் பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் பொறுப்பில் இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக இஷாந்த் குப்தா என்பவரே பா.ஜ.க. ஐ.டி. பிரிவு பொறுப்பில் இருந்து வருகிறார். அதற்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பா.ஜ.க. ஐ.டி. பிரிவு பொறுப்பில் ஜெய்தேவ் ராஜ்வால் என்பவர் இருந்து வந்துள்ளார். அதனால், ஜம்முவில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பு என்ற பத்திரிகை தகவல் போலியானது என தெரிவித்து உள்ளது.

ரஜோரி போலீசார் சமீபத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அதிக அளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். அப்போது, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செயல்பாடுகளும் தெரிய வந்தது.

தலீப் உசைன், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி காசிம் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலீப் மற்றும் பைசல் அகமது தர் இருவரும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி சல்மான் என்பவருடனும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story