ஜனதாதளம் (எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
தொடர் மழை எதிரொலியாக ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை வருகிற 19-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
ஜனதாதளம் (எஸ்) கட்சி அடுத்த ஆண்டு (2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. இதற்காக குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தப்பட்டு இருந்தது. கடந்த 1-ந்தேதி கனமழை பெய்ததால் பஞ்சரத்னா ரதயாத்திரை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் பஞ்சரத்னா ரதயாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார்.
ஆனால் பஞ்சரத்னா ரதயாத்திரை நடைபெறும் கோலார் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று தொடங்க இருந்த பஞ்சரத்னா யாத்திரை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சரத்னா யாத்திரையின் போது ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 90 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட குமாரசாமி முடிவு செய்திருந்தார். மழையின் காரணமாக பஞ்சரத்னா யாத்திரை தள்ளிபோவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதும் தள்ளிபோவதாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.