மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) ஆதரவு கேட்கிறது; சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை
மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 4-வது உறுப்பினர் பதவிக்கு காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு கேட்கிறது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.
பெங்களூரு:
வேட்பு மனுக்கள் ஏற்பு
இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 2 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு ஒரு உறுப்பினரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. 4-வது உறுப்பினர் வெற்றி பெற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆகிய 3 கட்சிகளுக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை.
பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ் மற்றும் லெகர் சிங் ஆகிய 3 பேரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர்கானும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திர ரெட்டியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த 3 கட்சிகளை சேர்ந்த 6 வேட்பாளர்களும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
கர்நாடக சட்டசபை செயலாளர் விசாலாட்சி முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இந்த பரிசீலனையில் 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் சரியாக இருப்பதால், அந்த மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலாளர் விசாலாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளார்.
நாளை கடைசி நாள்
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. 4-வது உறுப்பினர் பதவிக்கு தான் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதனால் 4-வது உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 3 கட்சிகளின் வேட்பாளர்களில் யார் தங்களது மனுக்களை திரும்ப பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் மீது அதிருப்தி
இந்த தேர்தலில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாகும். அதன்படி, பா.ஜனதா கட்சி 2 உறுப்பினர் பதவிகளையும், காங்கிரஸ் ஒரு உறுப்பினர் பதவியிலும் வெற்றி பெறமுடியும். 4-வது உறுப்பினா் வெற்றி பெற பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் பலம் இல்லை.
இதன் காரணமாக மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2-வது வேட்பாளர் நிறுத்தம்
ஏனெனில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி இருந்தால், அந்த கட்சி வசம் மீதம் இருக்கும் 24 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் பதவியை கைப்பற்றி விடலாம் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி திட்டமிட்டு இருந்தது. இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை, ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா ஆதரவு கேட்டு இருந்தார்.
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க சோனியா காந்தியும் சில நிபந்தனைகளை விதித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சித்தராமையாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் நடந்துவருவதால், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க சித்தராமையாவுக்கு விருப்பம் இல்லாமல், எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசித்தார்.
ஜனதாதளம் (எஸ்) வெற்றி பெற...
இதனால் ஏற்கனவே 2 மாநிலங்களவை உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்துள்ள, பா.ஜனதா 3-வது வேட்பாளராக நேற்று முன்தினம் லெகர்சிங்கை களத்தில் இறக்கி உள்ளது. இதனால் மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் 4-வது இடத்தில் வெற்றி பெறுவது யார்? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குபேந்திர ரெட்டியை, வெற்றிபெற செய்ய அந்த கட்சியினர், காங்கிரஸ், பா.ஜனதாவின் ஆதரவை கேட்கும் நிலை உருவாகி உள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தி, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்கவும், காங்கிரஸ் கட்சி 2-வதாக நிறுத்தி உள்ள வேட்பாளரை திரும்ப பெற செய்யும் நடவடிக்கையிலும் ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையாவுடன் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா, ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சித்தராமையாவுடன் சந்திப்பு
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை, அவரது வீட்டில் வைத்து திடீரென்று ஜனதாதளம் (எஸ்) கட்சியை எம்.எல்.சி.க்களான பி.எம்.பாரூக், டி.ஏ.ஷரவணா மற்றும் பிரமுகர்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது மாநிலங்களவை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 2-வது வேட்பாளர் வேட்புமனுவை திரும்ப பெற வேண்டும் என்று சித்தராமையாவிடம் ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மாநிலங்களவை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி சித்தராமையாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெற இன்னும் 2 நாட்கள் இருப்பதால், அதுபற்றி ஆலோசித்து பின்னர் தெரிவிப்பதாக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்களிடம் சித்தராமையா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. பின்னர் சித்தராமையா வீட்டில் இருந்து ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் புறப்பட்டு சென்றனர்.
ஆதரவு அளிக்க கோரிக்கை
சித்தராமையாவுடனான சந்திப்பு குறித்து டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. நிருபர்களிடம் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை மாநிலங்களவை தேர்தல் குறித்து சந்தித்து பேசினோம். ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும்படியும் அவரிடம் கோரிக்கை விடுத்தோம். ஏனெனில் காங்கிரஸ் கட்சி 2-வது வேட்பாளரை நிறுத்தி இருப்பதால், பா.ஜனதா கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது. பா.ஜனதா வெற்றி பெறக்கூடாது.
இதுதான் 2 கட்சிகளின் நோக்கமாகும். ஜனதாளம் (எஸ்) கட்சிக்கு 32 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அதனால் தான் எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவரும் இதுபற்றி ஆலோசிப்பதாக கூறியுள்ளார்,' என்றார்.