ஜெயலலிதா சொத்து விவகாரம்: கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்


ஜெயலலிதா சொத்து விவகாரம்: கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல்
x

ஜெயலலிதா சொத்து வழக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு,


சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். முன்னதாக சொத்து குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

வழக்கறிஞர் நியமனம்

இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வக்கீல் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து அண்மையில் உத்தரவிட்டார். இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜெ.தீபா மனு

இந்நிலையில், ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார். தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்'கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும், இந்த கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் என்னிடம் தரவேண்டும் எனவும் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை மனுவோடு இணைத்து தீபா தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.





Next Story