ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு


ராணுவ வாகனம் மீது  நடத்தப்பட்ட தாக்குதல்:  ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
x

பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவது வழக்கம் . அந்தவகையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி-பூஞ்ச் இடையே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இதில் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இருளும் சூழ்ந்திருந்தது. இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வாகனத்தை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்கினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்தது. அதில் இருந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.இந்த தாக்குதலை அரங்கேற்றியதும், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் பூஞ்ச் தாக்குதலுக்கு ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பினர் கூறும்போது, ஜெய்ஷ் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது.


Next Story