நகைக்கடை உரிமையாளரை கொன்ற மனைவி, மகள் - வெறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் வெறிச்செயல்
நகைக்கடை உரிமையாளரை அவரது மனைவி மற்றும் மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் அமித் வர்மா (வயது 40). இவருக்கு ஷாலு என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இதனிடையே, அமித் வர்மா வெறோரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது குறித்து ஷாலுவுக்கு தெரியவந்ததையடுத்து அமித் வர்மாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அமித் வர்மா தனது கள்ளக்காதலியுடன் தனிமையில் இருக்கும்போது ஷாலுவுக்கு வீடியோ கால் செய்தும் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அமித் வர்மாவுக்கும் அவரது மனைவி ஷாலுவுக்கும் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவு மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷாலுவை அமித் தாக்க முயற்சித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமித் வர்மாவின் மகள் அருகில் இருந்த கல்லைகொண்டு அவரது தலையில் போட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அமித் உயிரிழந்தார்.
பின்னர், அமித்தின் உடலை காரில் எடுத்துக்கொண்டு ஷாலுவும் அவரது மகளும் ரகீஷ்பூர் கிராமத்தில் உள்ள பாலைவன பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் காரை விட்டுவிட்டு ஷாலுவும் அவரது மகளும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பாலைவன பகுதியில் கார் தனியாக நிற்பது குறித்து போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் ரத்த வெள்ளத்தில் இருந்த அமித்தின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஷாலு மற்றும் அவரது மகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அமித்தை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.