ஜார்கண்ட்: தன்பாத் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி


ஜார்கண்ட்: தன்பாத் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி
x

image courtesy; ANI

தினத்தந்தி 14 Nov 2023 6:20 AM GMT (Updated: 14 Nov 2023 7:01 AM GMT)

இந்த தீ விபத்தினால் மேலும் 4 கடைகள் சேதமடைந்துள்ளன.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு அங்குள்ள சுபாஷ் குப்தா என்பவரின் கடையில் ஏற்பட்ட தீ, கடையின் மேல் தளத்திலுள்ள வீட்டிற்கும் பரவியது. மேலும் அருகிலுள்ள கடைகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி சுபாஷ் குப்தாவின் சகோதரி பிரியங்கா குப்தா (வயது 23), தாய் உமா தேவி (வயது 70) மற்றும் மகள் மவுலி குப்தா (வயது 5) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுபாஷ் குப்தா, அவருடைய மனைவி, 2 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோர் தீக்காயம் அடைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட, பொது மக்களும் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தீ விபத்தினால் 4 கடைகளும் சேதமடைந்துள்ளன.


Next Story