நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி ஜார்கண்ட் முதல்-மந்திரி பதவி பறிக்கப்படுமா? - கவர்னர் ரமேஷ் பயஸ் பேட்டி


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி ஜார்கண்ட் முதல்-மந்திரி பதவி பறிக்கப்படுமா? -  கவர்னர் ரமேஷ் பயஸ் பேட்டி
x

தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கிய ஜார்கண்ட் முதல்-மந்திரியின் பதவி, தேர்தல் கமிஷன் பரிந்துரைப்படி பறிக்கப்படுமா என்பது பற்றி கவர்னர் ரமேஷ் பயஸ் பேட்டி அளித்தார்.

ராய்ப்பூர்,

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், அங்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம், அவருடைய பதவிக்கு வேட்டாக மாறி உள்ளது. அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க கோரிக்கை வைத்தது.

அதன்பேரில் விசாரணை நடத்தி, அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்து மாநில கவர்னர் ரமேஷ் பயசுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிக்கை அனுப்பியது.

முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தால், முதல்-மந்திரி பதவியும் போய் விடும், ஆட்சி கவிழும் நிலை உருவாகும். ஆனால் தேர்தல் கமிஷனின் அறிக்கையின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவர்னர் ரமேஷ் பயஸ் மவுனம் காத்து வருகிறார். இதனால் குதிரைப்பேரம் நடந்து ஆட்சி பறிபோய் விடுமோ என்று ஹேமந்த் சோரன் பயந்துபோய் உள்ளார்.

எனவே குழப்ப நிலையை நீக்கவேண்டும் என கவர்னருக்கு ஆளும் கூட்டணி வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கவர்னர் ரமேஷ் பயஸ், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான சத்தீஷ்கார் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூர் சென்றுள்ளார்.

அங்கு அவரிடம், " ஜார்கண்ட் அரசை கவிழ்க்கும் நோக்கத்தில் நீங்கள் செயல்படுவதாக ஜார்கண்ட் மந்திரிகள் குற்றம்சாட்டுகிறார்களே?" என கேள்வி எழுப்பப்ப்ட்டது.

அதற்கு கவர்னர் ரமேஷ் பயஸ் பதில் அளித்து கூறியதாவது:-

இதோ பாருங்கள், அதுதான் எனது நோக்கம் என்றிருந்தால், தேர்தல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் நான் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்லது பழிவாங்கும் நோக்கத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க நான் விரும்பவில்லை.

நான் அரசியல் சாசன பதவி வகிக்கிறேன். நான் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும். நான் பழிவாங்கும் நோக்கத்தில செயல்படுகிறேன் என யாரும் என் மீது விரல் நீட்டக்கூடாது. எனவே நான் இந்த விவகாரத்தில் இரண்டாவது கருத்து கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அவர் இரண்டாவது கருத்தை யாரிடம் கேட்டிருக்கிறார் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.

"2-வது கருத்தைப் பெற்ற பிறகு அதிரடி முடிவு எதுவும் வருமா?" என கேள்வி எழுப்பியபோது, கவர்னர் ரமேஷ் பயஸ், " டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை போடப்பட்டுள்ளது. ஆனால் ஜார்கண்டில் அவ்வாறு தடை போடப்படவில்லை. எனவே அங்கே அணுக்குண்டு வெடிக்கலாம்" என பதில் அளித்தார்.

எனவே அவர் தேர்தல் கமிஷன் அறிக்கை மீது 2-வது கருத்து பெற்று, முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் பதவியைப் பறிக்கும் ஆபத்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இது ஜார்கண்ட் அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story