"நான் என்ன பயங்கரவாதியா?" - மெகபூபா முப்தி மகள் ஆவேசம்


நான் என்ன பயங்கரவாதியா? - மெகபூபா முப்தி மகள் ஆவேசம்
x

நிபந்தனையுடன் பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக மெகபூபா முப்தியின் மகள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்

ஸ்ரீநகர்,

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜாவின் (வயது 35) பாஸ்போர்ட் கடந்த ஜனவரி 2-ந் தேதி காலாவதி ஆனது. அதையடுத்து, புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். ஆனால், காஷ்மீரின் சி.ஐ.டி. போலீசார் அளித்த எதிர்மறையான அறிக்கையால், பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

இதனால், காஷ்மீர் ஐகோர்ட்டில் இல்டிஜா மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலிக்குமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இல்டிஜா, ஐக்கிய அரபு அமீரகத்தில் மேல்படிப்புக்காக செல்ல விரும்புவதால், அந்நாட்டில் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், 2 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லக்கூடியதாக நேற்று முன்தினம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இல்டிஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் சட்டத்தை மதிக்கும் இந்திய குடிமகள். நான் செய்த குற்றம் என்ன? நான் பயங்கரவாதியா? தேசவிரோதியா? நிரவ்மோடி போன்று தலைமறைவானவளா?

என் தாயார் மெகபூபா முப்தி என்பதற்காக, நிபந்தனையுடன் கூடிய பாஸ்போர்ட்டை கொடுத்துள்ளனர். ஐகோர்ட்டில் உள்ள என் மனுவை வாபஸ் பெறுமாறு நிர்பந்திக்கிறார்கள். ஆனால் நான் வாபஸ் பெற மாட்டேன். கடைசிவரை போராடுவேன் என்று அவர் கூறினார்.


Next Story